அரசு செலவினங்களுக்கு பட்ஜெட் நிறைவேற்றி, கடன் உச்ச வரம்பை உயர்த்தினால், குடியரசுக் கட்சியினரின் அனைத்து கோரிக்கைகள் குறித்தும் பேச்சு வார்த்தை நடத்த தயார் என்று அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
ஆனால் அரசை மிரட்டி பணிய வைக்க வேண்டும் என்று எண்ணினால், அது நிச்சயம் நடக்காது எனவும் எச்சரித்துள்ளார். நேற்று காலை எதிர்க் கட்சி அவைத் தலைவர் ஜான் பேனருடன் அதிபர் ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு அரசை இயங்க விடுங்கள், பேச்சு வார்த்தையை தொடங்கலாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அதிபரின் தொலைபேசி அழைப்பு மகிழ்ச்சிகரமாக இருந்ததாக தெரிவித்த பேனர், பேச்சு வார்த்தை குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல், மீண்டும் ஒபாமாவை குறை கூறினார். அரசு முடக்கத்துடன் சேரும் கடன் உச்ச வரம்பு பிரச்சனை பட்ட காலிலே படும் என்பதைப் போல், ஏற்கனவே அரசு வேலைகள் முடங்கி கிடக்கும் நிலையில், அக்டோபர் 17ம் தேதிக்குள் கடன் உச்ச வரம்பை உயர்த்தியாக வேண்டும்.
இல்லையென்றால், அரசு செலுத்த வேண்டிய தவணைத் தொகையை செலுத்த முடியாமல், பாக்கி வைத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்று விடும். அது நாட்டின் நம்பகத்தன்மையை குலைப்பதுடன், வட்டி விகிதம் அதிகரிக்கும். புதிய கடன்கள் கிடைக்காது. க்ரெடிட் ரேட்டிங்க் குறைந்து விடும்.
மொத்தத்தில் உலக அளவில் அமெரிக்காவின் மதிப்பு குறைந்து விடும். இஷ்டம் போல் ஏற்ற முடியாது குடியரசுக் கட்சியினரோ, செலவினங்களை கட்டுப்படுத்தாமல், கடன் வரம்பை அதிகரித்துக் கொண்டே சென்றால் அது எங்கே போய் முடியும் என எதிர் கேள்வி கேட்கின்றனர். ஆகையால் செலவுகளை குறைப்பதற்கான திட்டங்களை முன் வைத்தால்தான் , கடன் உச்ச வரம்பை அதிகரிக்க முடியும் என்கின்றனர்.
ஒபாமாவோ, குறைந்த கால அளவிற்காவது முதலில் உச்ச வரம்பை அதிகரியுங்கள், செலவுக் குறைப்பு பற்றி நிச்சயம் விவாதித்து முடிவுக்கு வருவோம் என்கிறார். குறுகிய காலத்திற்கு என்றாலும் பரவாயில்லை ஆனால் முதலில் அரசு இயங்கட்டும் என்கிறார் ஒபாமா.
நிலைமை சீராகுமா?
ஒருபுறம் பேச்சு வார்த்தையை தொடங்குங்கள் என்று ஜான் பேனர் சொன்னாலும், எதையும் விட்டுக் கொடுக்க முடியாது என்று அடுத்த வார்த்தையில் சொல்கிறார். இப்படி இருசாராரும் அவரவர் நிலையில் பிடிவாதமாக இருப்பதால், எப்படி முடிவுக்கு வரும் எப்போது வரும் என்ற நிச்சயமற்ற நிலைதான் இருக்கிறது.
இதன் எதிரொலியாக பங்கு சந்தையில் பாதிப்பு தென்படத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே குடியரசுக் கட்சியினர் மீது பொது மக்கள் அதிருப்தியாக இருக்கும் நேரத்தில், கடன் உச்ச வரம்பு பிரச்சனையையும் பெரிதாக்க அவர்கள் விரும்பவில்லை.
புதிய கோரிக்கைகளில் ஒபாமா கேர் திட்டத்தையும் கைவிட்டு விட்டார்கள். ஆகவே நிலைமை ஒரிரு நாட்களில் சீராகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
Read more at: http://tamil.oneindia.in/news/international/us-shut-down-after-week-185026.html
Read more at: http://tamil.oneindia.in/news/international/us-shut-down-after-week-185026.html
No comments:
Post a Comment